மச்சு பிக்ச்சு
Historic Sanctuary of Machu Picchu
மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது
1911 இல் மச்சு பிக்ச்சுவின் தோற்றம்
1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.
மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக்க் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.
பெருவில் மச்சு பிக்ச்சுவின் அமைவிடம்
"இன்டிகுவாட்டானா": இன்காக்களினால் கட்டப்பட்ட ஒரு வானியல் மணிக்கூடாகக் கருதப்படுகிறது
பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.
உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காடு.
இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.
இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.
இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், சுமார் ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கானகத்தைப் போலவே அடர்த்தியாய் கிடக்கிறது.
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள் கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.
காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.
நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தன்னுடைய நாட்டை மீட்க நினைத்த இன்கா மக்களின் தாகமே அது.
மச்சு பிக்ச்சுவின் 360 டிகிரி கோணத்தில் உள்ள படம். படத்தின் மீது கிளிக் செய்து கர்சரை நகர்த்தவும். நின்ற இடத்தில் இருந்தே சுற்றி பார்க்கும் அனுபவத்தை தரும். (மேலும் இந்த தளத்தில் உள்ள இதர 360 டிகிரி படங்களையும் பார்த்து ரசிக்க labels-ல் 360- degree என்பதை தேர்வு செய்யவும்)
ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.
ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.
மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.
இன்கா மக்களின் வியர்வையில் உருவான வில்காபாம்பா நகர் பாழடைந்து கானகத்தின் மௌனத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தது, ஓர் இனம் அழிந்த வரலாற்றின் கருப்புக் கண்ணீர் துளியாய்.
ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.
இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.
இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.
தொடர்ந்து ஒருவாரம் நடந்த அவர்கள் மண்டோர்பம்பா எனுமிடத்தில் தங்கினர். அங்கே சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர் ! அங்கிருந்து தங்கள் பயணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எதேச்சையாக அங்கிருந்த ஒரு நபரிடம் உரையாடினார்கள் அவர் பெயர் மெல்கோர் அர்டீகா.
அவர் சாதாரணமாய் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு விருட்டென எழுந்தார் பிங்காம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்கோனாட்டா அருவிக்கு மறுபக்கம் மலையின் மேல் சில கல் வீடுகள் உள்ளன என்பதே அந்த செய்தி.
ஹிராம் பிங்காம் அந்த மனிதரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அப்போது மழைக்காலமாக இருந்ததால் கூட வந்தவர்களில் ஒருவரைத் தவிர எவரும் அத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் பயணத்துக்கு விரும்பவில்லை.
பிங்காம் துணிந்தார். தனியே அந்த நபரையும் அழைத்துக் கொண்டு பயணமானார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே அடைந்தனர்.
மேலே சென்று பார்த்த பிங்காம் வியப்பின் உச்சிக்குச் சென்றார். இது தான், இது தான் நான் தேடிய இடம் என குதித்தார். அங்கே அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.
காலம் அந்த நகரின் மீது முளைப்பித்திருந்த மரங்களுக்கு வயதாகியிருந்தது. மரங்களும், பாசிகளும் இடிபாடுகளுக்குமிடையே சத்தமில்லாமல் கிடந்தது அந்த சரித்திரம்.
இன்னோர் வியப்பு அங்கும் ஒரு சில மனிதர்கள் உலகை விட்டு தனியே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது !
பிங்காம் தனது யேல் பல்கலைக்கழகத்தை உதவிக்காக அணுகினார். பல்கலைக்கழகம் தேசிய சுற்றுச் சூழல் அமைப்புடன் கைகோத்து பிங்காமுக்கு உதவியது.
அடுத்த ஆண்டே பிங்காம் தேவையான உதவிகளுடன் இந்த இடத்திற்கு மீண்டும் வந்து அந்த நகரை அதன் தன்மை கெடாமல் சுத்தம் செய்யத் துவங்கினார். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவருடைய குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் ஆனது !
அங்கிருந்து 173 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 150 பேர் பெண்கள்!. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது மேலும் பல கற்பனைகளுக்கு வழி வகுக்கிறது.
மற்றவர்கள் இந்த கோட்டை பணியாளர்களாக இருக்கலாம், அவர்கள் பள்ளத்தாக்குகளில் எறியப்பட்டிருக்கலாம், அல்லது வேறு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்கலாம், அல்லது வெளியேறியிருக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.
இந்த கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கென பல பொருட்களை பிங்காம் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்.
அங்கிருந்து தங்கம் வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் தெரிவிக்கிறார்.
பிங்காம் மறுத்தாலும், இந்த இடத்திலிருந்து ஏராளம் பொன் வெள்ளி போன்றவை கிடைத்திருக்க வேண்டும் என்றே பலர் கருதுகின்றனர்.
யாரும் அணுகாத, ஒரு பெரும் சாம்ராஜ்யம் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புடைய இந்த இடத்தில் மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும் எனவும் அவை பிங்காம் மூலம் பெரு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பதே பலரின் நம்பிக்கை.
தற்போது யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கின்ற மச்சு பிச்சுவின் மிச்சங்களையும், கலைப் பொருட்களையும் திரும்பவும் மச்சு பிச்சுவுக்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது இருக்கட்டும். நாம் வரலாற்றுக்கு வருவோம்.
மச்சு பிச்சு தான் வில்காபாம்பா என்று நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் பிங்காம். ஆனால் உண்மையில் அது வில்காபாம்பா இல்லை! வில்காபாம்பா 1964ம் ஆண்டு ஜீன் சாவோய் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இடத்தை பிங்காம் 1909ம் ஆண்டே கண்டார். ஆனால் இது ஏதோ முக்கியமற்ற ஒரு இடம் என நினைத்து அசட்டையாய் விட்டு விட்டார் !
1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.
1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.
வில்காபாம்பாவைத் தேடிப்போன பிங்காம் மச்சு பிச்சுவைக் கண்டுபிடித்தார். மச்சு பிச்சு என்ன ? அது ஏன் கட்டப்பட்டது ? போன்ற விவரங்கள் ஏதும் இல்லாமல் ஓர் மர்மத்தின் குழந்தையாய் கிடக்கிறது நகர்.
1450 களில் இந்த மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிறைவேறும் முன்பாகவே இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர் இன்கா மக்கள்.
ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு முன்பே இந்த மச்சு பிச்சுவை விட்டு அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். வறட்சியோ, நோயோ, அமானுஷ்ய பயமோ ஏதோ ஓர் பாதிப்பு இந்த நகரைக் காலி செய்ய மக்களை நிர்ப்பந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
சில ஆய்வாளர்கள் ஒருவேளை மன்னன் மரணமடைந்ததால் அடுத்த மன்னன் அந்த இடத்தை விரும்பாமல் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்படவேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.
இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது. புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மச்சு பிச்சு உண்மையிலேயே உறையும் உண்மைகளும், நிறையும் எழிலுமாக அதிசய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது
No comments:
Post a Comment